சம்பளத்தை தானாக குறைத்துக்கொண்ட விஜய் ஆண்டனி
நடிகர் விஜய் ஆண்டனி தனது சம்பளத்தை 25 சதவீதத்தை குறைத்துக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.;
சென்னை,
நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், எமன், அண்ணாதுரை, ‘காளி’ திமிரு பிடிச்சவன் உள்பட பல படங்களில் நடித்துள்ள விஜய் ஆண்டனி தற்போது கொரோனா வைரஸ் காரணமாக தென்னிந்திய திரையுலகத்தையும் பெரிதாக பாதித்திருக்கும் இந்த நேரத்தில், நடிகர் விஜய் ஆண்டனி, தற்போதைய நெருக்கடியை கருத்தில் கொண்டு, ஒத்துக் கொண்ட சம்பளத்தில் இருந்து 25% சதவீதம் குறைத்திருக்கிறார் (ஒரு கோடி ரூபாய் அளவில்). இதன் மூலம், தான் தற்போது நடித்து வரும் 3 படங்களின் தயாரிப்பாளர்களும் பயன் அடைவார்கள் என்று கூறப்படுகிறது.
விஜய் ஆண்டனியின் இந்த தாராள மனதை "அக்னி சிறகுகள்" தயாரிப்பாளர் T. சிவா மனமுவந்து பாராட்டி கூறுகையில்,
கொரோனா ஊரடங்கு தமிழ் சினிமாவை மொத்தமாக புரட்டி போட்டிருக்கிறது. 50 நாட்களுக்கு மேலாக எந்த பணிகளும் நடக்காமல், திரையரங்குகளும் இயங்காமல், பல படங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. புது படங்கள் திரையரங்குகளில் வெளியிட மேலும் மூன்று மாதங்கள் ஆகும் என்ற சூழ்நிலையில், தன்னை நம்பி திரைப்படங்கள் தயாரித்த தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில், விஜய் ஆண்டனி தாமாகவே முன்வந்து தனக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பளத்தில் 25 சதவீதத்தைக் குறைத்து கொள்ளுமாறு இந்த மூன்று படங்களின் தயாரிப்பாளர்களுக்கும் தெரிவித்து விட்டார்.
இந்த சம்பளக் குறைப்பு மூலம், மூன்று தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களின் மொத்த பட்ஜெட்டை குறைத்து, வெகு விரைவில் அவர்களின் படங்களை எந்த பிரச்சனைகளும் இல்லாமல் வெளியிட முடியும் என்று விஜய் ஆண்டனி நம்புகிறார் என அவர் கூறியுள்ளார்.