52 காட்சிகளுக்கு தணிக்கை குழு எதிர்ப்பு சர்ச்சையில் ‘மரிஜுவானா’ படம்

‘மரிஜுவானா’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது.

Update: 2020-01-01 22:45 GMT
‘மரிஜுவானா’  படத்தில் ரிஷி ரித்விக் கதாநாயகனாகவும் ஆஷா பாத்தலோம் நாயகியாகவும் நடித்துள்ளனர். பவர் ஸ்டார் சீனிவாசன் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். எம்.டி.ஆனந்த் இயக்கி உள்ளார். எம்.டி.விஜய் தயாரித்துள்ளார்.

போதை பழக்கத்துக்கு அடிமையான ஒருவனின் சைக்கோ கொலைகளை மையப்படுத்தி தயாராகி உள்ளது. படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி யூ சான்றிதழ் கேட்டனர். ஆனால் 52 சர்ச்சை காட்சிகள் இருப்பதாகவும் அவற்றை வெட்டி நீக்கினால் யூஏ சான்றிதழ் தருவதாகவும் தெரிவித்தனர்.  படக்குழுவினர் உடன்படவில்லை. இதையடுத்து படத்துக்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் அளித்துள்ளது.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் எம்.டி.ஆனந்த் கூறியதாவது:-

“உண்மை சம்பவங்களை வைத்து மரிஜுவானா படத்தை எடுத்துள்ளோம். போதைக்கு அடிமையானவர்களால் சமூகத்தில் நடக்கும் குற்றங்கள், குழந்தைகள் பராமரிப்பில் பெற்றோர்களுக்கு இருக்கும் கடமைகள் ஆகியவற்றை சொல்லி இருக்கிறோம். ஆனால் தணிக்கை குழுவினர் சர்ச்சையான 52 காட்சிகளை நீக்கினால்தான் ஏ சான்றிதழ் கொடுக்காமல் இருப்போம் என்றனர்.

சமூக அக்கறையுடன் பெற்றோர்களுக்கு எச்சரிக்கையூட்டும் படமாக எடுத்திருப்பதை சுட்டிக் காட்டி யூ ஏ சான்றிதழாவது கொடுங்கள் என்று கேட்டும் மறுத்து விட்டனர். இதனால் ஏ சான்றிதழுடன் படத்தை தமிழ் தாய் கலைக் கூடம் சார்பில் எஸ்.ராஜலிங்கம் அடுத்த மாதம் வெளியிடுகிறார்.”

இவ்வாறு அவர் கூறினார்.

ரிஷி ரித்விக் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பெண்களுக்கும் 40 வயதை கடந்தவர்களுக்கும் பாடமாக இந்த படம் இருக்கும் என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்