“5 புதிய படங்கள் தயாரிக்கிறேன்” பட விழாவில் ஐசரி கணேஷ் பேச்சு
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்து ஆர்.ஜே. பாலாஜி, பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ள படம் எல்.கே.ஜி.;
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்து கே.ஆர்.பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி, பிரியா ஆனந்த், ராம்குமார், நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடித்துள்ள எல்.கே.ஜி. படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியை படக்குழுவினர் சென்னையில் நடத்தினர்.
இதில் ஐசரி கணேஷ் பங்கேற்று பேசியதாவது:-
“எனது தந்தை பெயரில் தயாரித்த முதல் படமான எல்.கே.ஜி. பெரிய வெற்றியை பெற்று இருப்பது மகிழ்ச்சி. ஆர்.ஜே. பாலாஜி என்னை அணுகி கதை சொன்னபோது பிடித்ததால் தயாரித்தேன். இந்த அளவுக்கு வெற்றி பெறும் என்று நினைக்கவில்லை. நகைச்சுவை நடிகர்களாக இருந்து கதாநாயகர்களான நடிகர்கள் எல்லாம் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை மனதில் வைத்து, பாலாஜி நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும்.
ஜெயம் ரவி நடிக்கும் படம், ஜீவா படம், தேவி-2, பப்பி உள்ளிட்ட 5 படங்களை தயாரித்து வருகிறேன். இவை அடுத்தடுத்து வெளியாகும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கியமான படமாக எல்.கே.ஜி. வந்துள்ளது.
இவ்வாறு ஐசரி கணேஷ் கூறினார்.
நடிகர் ஆர்.ஜே. பாலாஜி பேசும்போது, “45 நாட்கள் திட்டமிட்ட படத்தை 37 நாட்களில் முடித்தோம். முதல் பட ஹீரோவுக்கு 310 தியேட்டர்கள் கிடைத்திருப்பதும், அதில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதும் மகிழ்ச்சி. படத்தின் ரிலீசுக்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனாலும் ஐசரி கணேஷ் விரும்பினால் அடுத்த படத்தை அவருக்கே செய்ய விரும்புகிறேன். இந்த படத்தின் வெற்றியின் மூலம் வரும் பணத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 10 அரசு பள்ளிகளை தத்தெடுத்து மேம்படுத்த இருக்கிறோம்” என்றார்.