‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கை எனக்கு பிடிக்காது - சாய்பல்லவி
லிவிங் டுகெதர் வாழ்க்கை எனக்கு பிடிக்காது என நடிகை சாய்பல்லவி தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் ‘பிரேமம்’ படத்தில் அறிமுகமான சாய்பல்லவி தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் சாய்பல்லவி அளித்த பேட்டி வருமாறு:-
“நான் நடிகையாக எல்லோருக்கும் ஞாபகத்தில் இருக்க வேண்டுமானால் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்ய வேண்டும். நான் நடித்த படங்கள் எனது அப்பா அம்மா பெருமைப்படுகிற மாதிரி இருக்க வேண்டும்.
இன்னும் 10, 20 ஆண்டுகளுக்கு பிறகு எனது குழந்தைகள் எனது படத்தை பார்த்தாலும் சந்தோஷப்படனும். அதனால்தான் அவசரப்படாமல் எனக்கு பிடித்த கதைகளோடு பயணத்தை நிதானமாக ஆரம்பித்து இருக்கிறேன். எந்த படமானாலும் மனதுக்கு பிடித்து இருந்தால்தான் ஒப்புக்கொள்கிறேன்.
காதலில் விழாதவர்கள் இருக்க முடியாது. அது எதன் மேல் என்பது முக்கியம். இப்போது எனக்கு சினிமா மீதுதான் பைத்தியம் உள்ளது. மருத்துவம் படிக்கும்போது காதலிக்க நேரம் இல்லை. ஆனால் பள்ளியில் படித்தபோது காதல் ஞாபகம் இருக்கிறது. என்னை யாரோ கவனிப்பதாக தோன்றும்.
ஆனால் சீரியஸாக காதலுக்குள் போகவில்லை. விளம்பர படங்களில் நடிக்க விருப்பம் இல்லை. பணம் வாங்காமல் சேவை பணிகள் செய்வேன். இப்போது திருமணம் பற்றி சிந்திக்கவில்லை. ஆனாலும் கண்டிப்பாக காதல் திருமணமாக இருக்காது. பெற்றோர்கள் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் மணப்பேன். திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் ‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கை எனக்கு பிடிக்காது.” இவ்வாறு சாய்பல்லவி கூறினார்.