உலக கேரம் போட்டி: 3 தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
தமிழக வீராங்கனை காசிமாவுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியா,
6-வது உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. அதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் தமிழக வீராங்கனையான சென்னையை சேர்ந்த காசிமா (வயது 17) பங்கேற்றிருந்தார். இவர் மகளிர் தனிநபர், இரட்டையர், குழு என மூன்று பிரிவுகளிலும் முதலிடத்தை பிடித்து 3 தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். காசிமா சென்னை புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காசிமாவுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,
சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தங்கை காசிமா, அமெரிக்காவில் நடைபெற்ற 6-ஆவது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 பிரிவுகளில் தங்கம் வென்று உலக அளவில் சாதனை படைத்துள்ளார்.கடந்த ஜூலை மாதம், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் காசிமாவின் பயணம் - பயிற்சிக்காக ரூ.1.50 லட்சத்தை வழங்கி வாழ்த்தியிருந்த நிலையில், 3 தங்கப் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டுக்கு பெருமைத் தேடித்தந்துள்ளார். தங்கை காசிமாவின் வெற்றிப்பயணம் தொடரட்டும். என தெரிவித்துள்ளார்.