போட்டியின் போது கால்பந்து மைதானத்தில் மயங்கி விழுந்த வீரர் - வீடியோ

காலிறுதி போட்டியின் முதல் லெக் போட்டியில் சாவ் பாலோ, பொடாபோகோவை எதிர்கொள்ள உள்ளது.;

Update:2024-08-24 10:58 IST

image courtesy; X (twitter)

மொரம்பிஸ்,

கோபா லிபர்டடோர்ஸ் கால்பந்து தொடரில் பிரேசிலில் உள்ள மொரம்பிஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 (லெக்-2) சுற்று ஆட்டம் ஒன்றில் சாவ் பாலோ - உருகுவேயின் கிளப் நேஷனல் டி கால்பந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் 0-0 என முதல் பாதி ஆட்டம் முடிந்தது.

தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். அப்போது ஆட்டத்தின் 84வது நிமிடத்தில் கிளப் நேஷனல் டி கால்பந்து அணியின் டிபெண்டர் ஜுவான் இஸ்கியர்டோ மைதானத்தில் சுருண்டு விழுந்து மயக்கம் அடைந்தார்.

இதையடுத்து உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து நேஷனல் டி கால்பந்து அணி வெளியிட்ட அறிவிப்பில் போட்டியின் போது ஜுவான் இஸ்கியர்டோவுக்கு ஒழுங்கற்ற இதயத்துடிப்பு ஏற்பட்டதால் அவர் மயங்கி விழுந்ததாகவும், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு பின் மீண்டும் தொடங்கிய ஆட்டத்தில் சாவ் பாலோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் நேஷனல் டி கால்பந்து அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. செப்டம்பர் 18ம் தேதி நடைபெறும் காலிறுதி போட்டியின் முதல் லெக் போட்டியில் சாவ் பாலோ, பொடாபோகோவை எதிர்கொள்ள உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்