சர்பராஸ் அந்த தவறை செய்திருந்தாலும் நீங்கள் அவரை குறை சொல்ல கூடாது - கம்பீருக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்

இந்திய அணிக்குள் நடக்கும் விஷயங்களை சர்பராஸ் கான் வெளியிடுவதாக கம்பீர் கூறியிருந்தார்.;

Update:2025-01-18 08:29 IST
சர்பராஸ் அந்த தவறை செய்திருந்தாலும் நீங்கள் அவரை குறை சொல்ல கூடாது - கம்பீருக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்

image courtesy: PTI

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் முடிவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் படுதோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக இந்திய வீரர்களிடம் தலைமை பயிற்சியாளர் கம்பீர் மிகவும் கோபமாக நடந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் அணிக்குள் நடக்கும் விஷயங்கள் எப்படி வெளியே தெரிகிறது என்பது அனைவருக்கும் குழப்பமாக இருந்தது. இதனிடையே இளம் வீரர் சர்பராஸ் கான்தான் அணியில் நடக்கும் விஷயங்களை வெளியில் கூறுவதாக கம்பீர் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் இப்படி தினம் தினம் இந்திய அணியிலிருந்து ஏதேனும் தகவல்கள் கசிவதை பார்ப்பது கவலையளிப்பதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். மேலும் இளம் வீரர்கள் தவறு செய்தால் அவர்களுக்கு கவுதம் கம்பீர் அறிவுரை வழங்க வேண்டுமே தவிர குறை சொல்ல கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ஆஸ்திரேலியா அல்லது அதற்கு பின் கடந்த சில தினங்களில் அணிக்குள் நடைபெற்ற விஷயங்கள் வெளியே வந்திருக்கக்கூடாது. களத்தில் வெற்றிகளும் தோல்விகளும் இருக்கும். ஆனால் இந்திய அணியிலிருந்து எந்த புதிய கதைகளும் வரக்கூடாது. சர்பராஸ் கான்தான் இந்திய அணியிலிருந்து ஊடகங்களில் தகவல்களை கசிய விடுகிறார் என்று கம்பீர் சொன்னதாக இன்று ஒரு புதிய கதை வந்துள்ளது. ஒருவேளை கம்பீர் அப்படி கூறியிருந்தால் அது சரியல்ல.

சர்பராஸ் கான் ஆஸ்திரேலியாவில் இதை செய்திருந்தாலும் பயிற்சியாளரான நீங்கள் அவரிடம் அது பற்றி பேசியிருக்க வேண்டும். இளம் வீரரான அவருக்கு புரிய வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் வருங்காலங்களில் இந்தியாவுக்காக விளையாடுவார். இளம் வீரர்களுக்கு அறிவுரை வழங்குவது சீனியர் வீரர்களான நமது கடமை. அணிக்குள் நடக்கும் விவாதங்கள் பொதுவெளியில் வரக்கூடாது. புதிதாக வந்துள்ள கம்பீருக்கு நேரம் கொடுக்க வேண்டும். கடந்த 6 - 8 மாதங்களில் இந்திய கிரிக்கெட்டில் நிறைய வதந்திகள் வந்தன. நீங்கள் அவற்றை ஒன்றாக அமர்ந்து பேசி தீர்க்க வேண்டும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்