உலகக்கோப்பை இறுதிப்போட்டி: ரோகித் சொன்னதை உண்மையாக்கிய விராட் கோலி

ரோகித் சர்மா கூறியது போலவே இறுதிப்போட்டியில் கோலி ரன்கள் அடித்துள்ளார்.

Update: 2024-06-29 21:20 GMT

பார்படாஸ்,

பரபரப்பாக நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 2-வது முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

முன்னதாக, இந்த தொடரில் அரையிறுதி வரை விளையாடிய அனைத்து போட்டிகளிலுமே விராட் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையே, அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் விராட் கோலியின் பார்ம் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் பேசுகையில்,

"விராட் கோலி ஒரு தரமான வீரர். அணியில் அவரின் முக்கியத்துவம் எங்களுக்கு நன்றாக தெரியும். 15 ஆண்டுகளாக விளையாடும் வீரர் பார்மில் இருப்பதும், இல்லாமல் போவதும் பிரச்சினையே கிடையாது. அவர் ஒரு நோக்கத்துடன் உள்ளார். அவர் தனது ஆட்டத்தை இறுதிப்போட்டிக்காக கூட சேமித்து வைத்திருக்கலாம்" என்று ஆதரவு குரல் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், ரோகித் சர்மா கூறியது போலவே இறுதிப்போட்டியில் கோலி ரன்கள் அடித்ததுடன், இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அவர் 59 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 76 ரன்கள் எடுத்தார். கோலியின் ஆட்டத்தால் இந்திய அணியால் கவுரவமான ஸ்கோரை ஏட்ட முடிந்தது. இறுதிப்போட்டியில் விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்