ரஷித் கானுக்கு 4 ஓவர்கள் வழங்காதது ஏன்..? குஜராத் கேப்டன் விளக்கம்
மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரஷித் கான் 2 ஓவர்கள் மட்டுமே பந்து வீசினார்.;

image courtesy:PTI
அகமதாபாத்,
18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் ஜெயித்த மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 63 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதனையடுத்து 197 ரன் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 160 ரன்களே எடுத்தது. இதனால் குஜராத் அணி 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 48 ரன்கள் அடித்தார். குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்த ஆட்டத்தில் குஜராத் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் 2 ஓவர்கள் மட்டுமே பந்து வீசினார். ஐ.பி.எல். வரலாற்றில் அவர் முழுமையாக 4 ஓவர்கள் வீசாதது இதுவே முதல் நிகழ்வாகும்.
இதற்கான காரணம் குறித்து விளக்கமளித்துள்ள குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில், "எனக்குத் தெரியாது, ஒருவேளை அவர் 4 ஓவர்கள் வீசாமல் இருப்பது இதுவே முதல் முறையா இருக்கலாம். நான் உண்மையில் அவரை இறுதி கட்டத்தில் பயன்படுத்த திட்டமிட்டிருந்தேன். ஆனால் வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்து வீசுகிறார்கள் என்று நினைத்தேன். பிரசித் நன்றாக பந்து வீசினார். அதனால் வேகப்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்த விரும்பினேன்" என்று கூறினார்.