இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சில் தடுமாறுவது ஏன்..? - பாண்டிங் விளக்கம்
இந்திய பேட்ஸ்மேன்கள் தற்போது சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தடுமாற்றமாக செயல்பட்டு வருகின்றனர்.
சிட்னி,
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. இதன் மூலம் 12 வருடங்கள் கழித்து இந்தியா சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்ல அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா வென்றாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக நியூசிலாந்து தொடரில் தோல்வியை சந்திக்க அந்த அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் கொத்தாக விக்கெட்டுகளை பறிகொடுத்தது முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் இதற்கு முன்னர் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இந்திய பேட்ஸ்மேகள் சுழலுக்கு எதிராக தடுமாறி தொடரையும் இழந்தனர். இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மறந்து விட்டார்களா? என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இதற்கான காரணம் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேசியது பின்வருமாறு:- "இது நல்ல தரமான சுழல் பந்து வீச்சுக்கு எதிரான இந்தியாவின் பாதிப்பை எடுத்துக்காட்டுகிறது என்று நினைக்கிறேன். நவீன இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதையும் அது காட்டுகிறது. ஒருவேளை தற்போது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான பிட்ச்களில் இந்திய அணியினர் அதிகமாக விளையாடுவது காரணமாக இருக்கலாம்.
அதன் பயனாக தற்போது இந்திய அணி நிறைய தரமான வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. அதனால் அவர்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக முன்பு போல் விளையாடாமல் இருக்கலாம். ஒருவேளை அது ஐபிஎல் தொடரால் இருக்கலாம். அல்லது ஐபிஎல் தொடரில் அதிகமாக விளையாடும் இளம் இந்திய வீரர்கள் கடந்த 15 - 20 ஆண்டுகளுக்கு முன்புபோல ஸ்பின்னர்களை அதிகமாக எதிர்கொள்ளாததால் இருக்கலாம்" என்று கூறினார்.