கெய்க்வாட் இன்னும் என்ன செய்ய வேண்டும்..? - அணியில் தேர்வு செய்யாதது குறித்து கேள்வி எழுப்பிய முன்னாள் வீரர்
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.
அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இடம் அளிக்கப்படவில்லை. அதே சமயம் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் தொடரில் விளையாடும் இந்தியா ஏ அணிக்கு பி.சி.சி.ஐ ருதுராஜை கேப்டனாக தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளது.
இந்நிலையில் இதற்கு இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மயங் யாதவ் சில ஓவர்கள் வீசியதும் காயமடைந்து விட்டதாக சொல்கிறீர்கள். ரியான் பராக், சிவம் துபே ஆகியோரும் காயமடைந்ததாக சொல்கிறீர்கள். ஆனால் ருதுராஜ் விஷயத்தில் என்னால் எதையும் புரிந்து கொள்ள. ஏமாற்றமடைந்துள்ள அந்தப் பையன் இன்னும் என்ன செய்ய வேண்டும்? ஒரு சதம் அடித்தால் மீண்டும் அவரை டி20 அணியில் தேர்ந்தெடுப்பார்கள் அல்லவா?.
ஆனால் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 2 சதங்கள் அடித்துள்ளார். அப்படியிருந்தும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அபிமன்யு ஈஸ்வரன் சிறப்பாக விளையாடியதால் வாய்ப்பு பெற்றுள்ளதை நான் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் ருதுராஜ் தேர்வில் என்ன செய்கிறீர்கள். அவரது விஷயத்தில் ஏன் சுற்றி வளைக்கிறீர்கள்? என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?.
அவர்கள் என்ன செய்கிறார்களோ செய்யட்டும். இந்தப் பையன் உள்ளூரில் தமக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் தொடர்ந்து அசத்தி வருகிறார். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் அவரை நீங்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகிறீர்கள். இல்லையேல் இந்தியா ஏ அணி அல்லது ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி போன்றவற்றில் மட்டுமே வாய்ப்பு கொடுக்கிறீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.