இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சுக்கு தடுமாற பி.சி.சி.ஐ.தான் காரணம் - ஹர்பஜன் சிங்
இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சுக்கு தடுமாற பி.சி.சி.ஐ. நிர்வாகமே காரணம் என்று ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக இலங்கை மண்ணில் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. அதில் டி20 தொடரில் வெற்றி பெற்ற இந்தியா ஒருநாள் தொடரில் இலங்கைக்கு எதிராக 27 வருடங்கள் கழித்து தோற்றது. அந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமான கொழும்பு மைதானத்தில் இலங்கை ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமானது. அதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மறந்து விட்டார்களா? என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னிற்கு சாதகமான பிட்ச்களில் திணறுவதற்கு இந்திய அணி நிர்வாகமும் முக்கிய காரணம் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசுகையில், "நாம் அதிகளவில் சுழலக் கூடிய பிட்ச்களில் விளையாட தொடங்கிவிட்டோம். நாம் வெற்றி பெற வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டை இரண்டரை நாட்களுக்குள் வெல்ல வேண்டும் என்று நினைக்க கூடாது. சாதாரண பிட்ச்களை தயார் செய்துவிட்டு, 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் நன்றாக ஸ்பின்னாக கூடிய பிட்ச்களை தயார் செய்திருக்கலாம்.
அப்போதும் இந்திய அணிதான் வென்றிருக்கும். அதேபோல் பேட்ஸ்மேன்களுக்கு அதுபோன்ற பிட்ச்களில் செட்டிலாகி ரன்கள் சேர்க்கவும் தெரிந்து கொண்டிருப்பார்கள். அதேபோல் தற்போது இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களிடம் திணறுவதை பற்றி யாரும் பேசுவதே இல்லை. நாமே நமது பேட்ஸ்மேன்களின் மன உறுதியை குறைத்துள்ளோம் மோசமாக ஆட்டமிழக்க காரணமாக அமைந்திருக்கிறோம்.
இந்த தவறை திருத்துவதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது. நல்ல பிட்ச்களில் விளையாடினாலும், இந்திய அணியை யாராலும் வீழ்த்த முடியாது. இந்திய அணியிடம் நல்ல வேகப்பந்து வீச்சாளர்களும், நல்ல ஸ்பின்னர்களும் இருக்கிறார்கள். அவர்களால் 5வது நாள் ஆட்டத்தில் கூட இந்திய அணியை வெற்றி பெற வைக்க முடியும். அதேபோல் நல்ல பிட்ச்களில் பேட்ஸ்மேன்கள் விளையாடும்போது, அதிகப்படியான ரன்களை குவிப்பார்கள். இதன் மூலமாக அவர்களின் நம்பிக்கை அதிகரித்து, எந்த பிட்ச்களில் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புவார்கள். என்னை பொறுத்தவரை நமது பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக பேட்டிங் செய்ய மறந்துவிட்டார்கள் என்று சொல்ல மாட்டேன். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மோசமான பிட்ச்களில் இந்திய அணி அதிகம் விளையாடி இருக்கிறது" என்று கூறினார்.