டி.என்.பி.எல்.: பரபரப்பான ஆட்டத்தில் சேப்பாக்கை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற நெல்லை ராயல் கிங்ஸ்

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 166 ரன்கள் அடித்தது.

Update: 2024-07-07 13:25 GMT

சேலம்,

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற நெல்லை பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜெகதீசன் 63 ரன்கள் குவித்தார். நெல்லை தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நெல்லை பேட்டிங் செய்ய களமிறங்கியது. நெல்லை அணியின் தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

இதன்பின் ஜோடி சேர்ந்த மொகித் ஹரிஹரன் - அஜிதேஷ் குருசாமி இணை அதிரடியாக விளையாடி அணியை முன்னெடுத்து சென்றது. அஜிதேஷ் 14 பந்துகளில் 30 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய அருண் குமார் 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் நிதிஷ் ராஜகோபால் பொறுப்புடன் விளையாட மொகித் ஹரிஹரன் அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் நெல்லை அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

அந்த ஓவரின் முதல் 5 பந்துகளிலேயே 21 ரன்கள் அடித்த நெல்லை திரில் வெற்றி பெற்றது. 19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த நெல்லை 168 ரன்கள் அடித்து திரில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ராஜகோபாலன் 53 ரன்களும், மொகித் ஹரிஹரன் 52 ரன்களும் அடித்தனர். சேப்பாக தரப்பில் அதிகபட்சமாக டேரில் பெராரியோ 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்