நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தொடரை இழக்க காரணம் இதுதான் - பாக்.முன்னாள் வீரர் விமர்சனம்

நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியை சந்தித்தது ஏமாற்றமளிப்பதாக பாசித் அலி கூறியுள்ளார்.

Update: 2024-10-27 09:14 GMT

புனே,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெங்களூருவில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே புனேயில் கடந்த 24-ம் தேதி தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டி 3-வது நாளிலேயே முடிவுக்கு வந்தது. இதில் 113 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்து அணியிடம் 12 வருடங்கள் கழித்து இந்தியா தோல்வியை சந்தித்தது ஏமாற்றமளிப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி கூறியுள்ளார். அதற்கு சொந்த மண்ணில் எப்படியும் வெற்றி பெற்று விடுவோம் என்ற அதீத தன்னம்பிக்கையுடன் இந்தியா விளையாடியதே காரணம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-"350+ ரன்களை துரத்துவது மிகவும் கடினம் என்று நான் கூறியிருந்தேன். அதற்கு டாப் 3 இந்திய பேட்ஸ்மேன்களில் ஒருவர் சதமடித்திருக்க வேண்டும். இங்கே இந்தியாவின் மோசமான பேட்டிங் உலகிற்கு காண்பிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் 17 விக்கெட்டுகளை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் எடுத்தனர். இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து ஸ்பின்னர்கள் 19 விக்கெட்டுகள் எடுத்தனர். இதிலிருந்து இந்திய வீரர்கள் வேகத்தையும் சுழலையும் சிறப்பாக எதிர்கொள்ளவில்லை என்பது தெரிகிறது. பெங்களூருவில் வேகத்துக்கு சாதகமான ஆடுகளத்திலும் இந்தியா தோற்றது. புனேவில் சுழலுக்கு சாதகமான ஆடுகளத்திலும் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது.

வங்காளதேசத்துக்கு எதிராக இந்தியா 2 நாட்களில் வென்றது. அந்த சமயத்தில் 2- 0 என்ற கணக்கில் இலங்கை அணி நியூசிலாந்தை எளிதாக தோற்கடித்தனர். அதனால் இந்திய அணியினர் அதீத தன்னம்பிக்கையுடன் இருந்துள்ளார்கள். ஆனால் நியூசிலாந்து திட்டங்களை வகுத்து வந்தனர். இந்தியாவை சொந்த மண்ணில் நியூசிலாந்து தோற்கடிக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. நியூசிலாந்து அணியே இதை நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் சரியான திட்டங்களை வகுத்து வென்றுள்ளார்கள்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்