அந்த வீரரின் இன்னிங்ஸ்தான் இரு அணிகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் - வில்லியம்சன்

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் நியூசிலாந்து தோல்வியை தழுவியது.

Update: 2024-06-13 09:26 GMT

டிரினிடாட்,

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்திருந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரூதர்போர்டு 68 ரன்கள் குவித்தார்.

இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதனால் டி20 உலகக்கோப்பை தொடரில் குரூப் சுற்றுடன் வெளியேறும் நிலைக்கு நியூசிலாந்து அணி தள்ளப்பட்டுள்ளது.

இந்த தோல்வி குறித்து நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேசுகையில், " ரூதர்போர்ட் இன்னிங்ஸ்தான் இரு அணிகளுக்கும் இடையிலான வித்தியாசம். நிச்சயம் அவரின் இன்னிங்ஸ் அனைவரையும் வியக்க வைத்தது. எங்களுக்கு கொஞ்சம் எரிச்சலாக இருந்தது என்றே கூறலாம். வெஸ்ட் இண்டீஸ் அணியின் நீண்ட பேட்டிங் வரிசை இந்த போட்டியில் பயனளித்துள்ளது. நாங்கள் ரூதர்போர்ட் விக்கெட்டை வீழ்த்த அட்டாக்கிங் வாய்ப்பை தேர்வு செய்தோம். டி20 கிரிக்கெட்டில் சின்னச்சின்ன தவறுகளும் ஆட்டத்தை மாற்றிவிடும்.

சான்ட்னருக்கு கடைசி ஓவர் கொடுத்தது நம்பிக்கையால்தான். முதல் 12 ஓவர்கள் ஆட்டம் எங்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ஒரு ஓவரில் 2 அல்லது 3 பந்துகளில் நிச்சயம் பெரிய ஷாட் போகும் என்று எண்ணியிருந்தேன். அதனால் சராசரிக்கும் அதிக ஸ்கோர் செல்ல வாய்ப்பு இருப்பதாக கணித்திருந்தேன். சூழலை ஒருபோதும் குறையாக சொல்ல கூடாது. 10 முதல் 15 ரன்கள் நிச்சயம் பெரிய வித்தியாசத்தை கொடுக்கும். அதனால் அடுத்தடுத்த போட்டிகளில் பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று நினைக்கிறேன். கொஞ்சம் ஸ்மார்ட் கிரிக்கெட்டை விளையாட வேண்டும். இதன் படிப்பினையை அடுத்த போட்டிகளில் செயல்படுத்த வேண்டும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்