டெஸ்ட் கிரிக்கெட்; கபில்தேவ் சாதனையை சமன் செய்த கஸ் அட்கின்சன்
இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் கஸ் அட்கின்சன் சதம் அடித்து அசத்தினார்.
லண்டன்,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. தொடக்க டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன்கள் எடுத்தார். அட்கின்சன் 74 ரன்களுடனும், மேத்யூ போட்ஸ் 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இலங்கை தரப்பில் அசிதா பெர்ணாண்டோ, மிலன் ரத்னாயகே மற்றும் லஹிரு குமரா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய அட்கின்சன் சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் மேத்யூ போட்ஸ் 21 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 102 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 427 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன், கஸ் அட்கின்சன் 118 ரன் எடுத்தனர். இலங்கை தரப்பில் அசிதா பெர்ணாண்டோ 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.
இந்த ஆட்டத்தில் சதம் அடித்த அட்கின்சன் கபில் தேவின் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார். அதாவது, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்தவர்கள் பட்டியலில் கபில் தேவின் (4 சிக்சர்) சாதனையை கஸ் அட்கின்சன் (4 சிக்சர்) சமன் செய்துள்ளார்.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (9 சிக்ஸ்) உள்ளார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்தவர்கள் விவரம்;
பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) - 9 சிக்சர் (2023)
ஆண்ட்ரூ ப்ளிண்டாப் (இங்கிலாந்து) - 5 சிக்சர் (2003)
கபில் தேவ் (இந்தியா) - 4 சிக்சர் (1990)
கிரஹாம் கூச் (இங்கிலாந்து) - 4 சிக்சர் (1990)
கிறிச் ஹெய்ர்ன்ஸ் (நியூசிலாந்து) - 4 சிக்சர் (2004)
கஸ் அட்கின்சன் (இங்கிலாந்து) - 4 சிக்சர் (2024)