அஸ்வினை கழற்றிவிட்டு அவருக்கு வாய்ப்பளியுங்கள் - இந்திய முன்னாள் வீரர்

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நவம்பர் 1-ம் தேதி தொடங்க உள்ளது.

Update: 2024-10-28 09:02 GMT

image courtesy: twitter/@BCCI

மும்பை,

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்தியா அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் 12 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்தியா இழந்துள்ளது.

முன்னதாக புனேவில் சுழலுக்கு சாதகமான மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய மூத்த ஸ்பின்னர்கள் எதிர்பார்த்த அளவுக்கு விக்கெட்டுகளை எடுக்கவில்லை. மறுபுறம் இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் 11 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு போராடினார்.

இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் விளையாடுவது வெற்றிக்கு அவசியம் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அதற்காக வேண்டுமானால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு 37 வயதாகும் அஸ்வினை கழற்றி விடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ஸ்பின் நம்முடைய பலம் என்று நம்புகிறோம். இருப்பினும் நாம் சுழல் பந்துகளை நன்றாக வீசுகிறோமா? என்பது பெரிய கேள்வியாகும். வாஷிங்டன் சுந்தர் நிறைய விக்கெட்டுகளை எடுத்து போட்டியை தலைகீழாக மாற்றினார். அவருடைய செயல்பாடுகளை புத்திசாலித்தனமானது என்று நீங்கள் சொல்லலாம். இருப்பினும் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் நன்றாக செயல்படவில்லை. அதனால் நீங்கள் அவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.

இத்தனைக்கும் அஸ்வின் வங்காளதேச தொடரில் தொடர்நாயகன் விருது பெற்றார். ஆனால் அவர்களைப் போன்ற மூத்த ஸ்பின்னர்களுக்கான மாற்றம் வரும்போது நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது. ஏனெனில் அவர்கள் வயதான ஸ்பின்னர்கள். அது போன்ற சூழ்நிலையில் அஸ்வின் முதலாவதாக செல்ல வேண்டும். ஏனெனில் அவர் அதிக வயதுள்ளவர். ஜடேஜா கொஞ்சம் இளமையாகவும் பிட்டாகவும் இருப்பதால் அவர் இன்னும் நீண்ட காலம் இருப்பார். அதே சமயம் நீங்கள் புதியவர்களை வளர்க்க வேண்டும். அதற்காக வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கொடுக்க தொடங்கியுள்ளீர்கள்.

ஆனால் குல்தீப் யாதவுக்கு நீங்கள் சரியான விஷயத்தை செய்யவில்லை. நவீன பேட்ஸ்மேன்கள் அவரைப் போன்ற மணிக்கட்டு ஸ்பின்னருக்கு எதிராக சரணடைவார்கள். ஆனால் அவருக்கு நாம் வாய்ப்பு கொடுக்கவில்லை. அவரை நாம் சரியாக பயன்படுத்தவில்லை என்பதே உண்மை. அவருக்கு லேசான காயம் இருந்தாலும் மும்பையில் நடைபெறும் 3வது போட்டியில் விளையாடுவதற்கு தயாராக இருப்பதாகவே கூறப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்