டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: விராட் அரைசதம்...தென் ஆப்பிரிக்க அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயம்

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்கள் அடித்தார்.

Update: 2024-06-29 16:09 GMT

பார்படாஸ்,

9-வது டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் - விராட் கோலி களமிறங்கினர்.

இதில் முதல் ஓவரிலேயே 15 ரன்கள் அடித்து அதிரடியாக தொடங்கிய இந்தியாவுக்கு, 2-வது ஓவரை வீசிய கேஷவ் மகராஜா இரட்டை செக் வைத்தார். அந்த ஓவரில் ரோகித் 9 ரன்களிலும், பண்ட் டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர். அவரைதொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.

பின்னர் கை கோர்த்த விராட் கோலி - அக்சர் படேல் இணை சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தது. விராட் கோலி ஒருபுறம் நிதானமாக விளையாட மறுமுனையில் அக்சர் அதிரடியாக விளையாடினார். அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அக்சர் படேர் துரதிர்ஷ்டவசமாக 47 ரன்களில் ரன் அவுட் ஆனார். நிலைத்து விளையாடிய விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தினார். ஷிவம் துபே தனது பங்குக்கு 27 ரன்கள் அடித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் அடித்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக நோர்ஜே மற்றும் கேஷவ் மகராஜா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்க உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்