டி20 உலகக்கோப்பை: ஓமனை வீழ்த்திய ஆஸ்திரேலியா

ஓமன் அணி 20 ஓவர்கள் முடிவில் 125 ரன்களே எடுத்தது.

Update: 2024-06-06 04:53 GMT

பிரிட்ஜ்டவுண்,

டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெற்றுவரும் 10-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஓமன் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் - டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இவர்களில் ஹெட் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் மார்ஷ் 14 ரன்னிலும், அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் டக் அவுட் ஆகியும் வெளியேறினர்.

ஆஸ்திரேலிய அணி 50 ரன்களில் 3 முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும், வார்னர் - ஸ்டோய்னிஸ் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். குறிப்பாக வார்னர் அதிரடி காட்டாமல் நிதானமாக விளையாடினார். அவர் 51 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் ஸ்டோய்னிஸ் அதிரடி காட்டி அரைசதம் கடக்க, ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டோய்னிஸ் 36 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். ஓமன் அணி தரப்பில் மெஹ்ரான் கான் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணி பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலிய அணியின் அபார பந்துவீச்சால் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஓமன் அணியால் 125 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 39 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. அத்துடன், நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியை பதிவுசெய்தது. அணியில் அதிகபட்சமாக ஸ்டோய்னிஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்