ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் கிறிஸ் கெயிலின் மாபெரும் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா

இந்த பட்டியலில் ஷாகித் அப்ரிடி முதலிடத்தில் உள்ளார்.

Update: 2024-08-08 10:10 GMT

கொழும்பு,

இந்தியா - இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலங்கா முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அவிஷ்கா பெர்னண்டோ 96 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இந்த முறையும் இலங்கை சுழற்பந்து வீச்சில் சிக்கினர். தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன சுப்மன் கில் 6 ரன்களிலும், கேப்டன் ரோகித் சர்மா 35 ரன்களிலும் (20 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலியும் 20 ரன்களில் வீழ்ந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

வெறும் 26.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்திய அணி 138 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகே 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இலங்கை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது ஆட்டம் சமனில் முடிந்திருந்த நிலையில், 2-வது போட்டியில் இலங்கை வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்த போட்டியில் ரோகித் சர்மா அடித்த 1 சிக்சர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 331வது சிக்சராக பதிவானது. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களின் மாபெரும் சாதனை பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த கிறிஸ் கெயிலை சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் 351 சிக்சர்களுடன் ஷாகித் அப்ரிடி முதலிடத்தில் உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்