பண்ட், ஜெய்ஸ்வால் அல்ல... இந்த இந்திய வீரர் ஆஸ்திரேலிய ரசிகர்களை கவரப் போகிறார் - டிம் பெய்ன்

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது.

Update: 2024-11-12 12:08 GMT

Image Courtesy: AFP

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. இதையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது.

இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. தற்போது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்தத் தொடருக்கு தயாராகும் வகையில் சமீபத்தில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி 2 பயிற்சி டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.

அந்த இரண்டு போட்டிகளிலுமே இந்தியா தோல்வியை சந்தித்தாலும் முதல் போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் சதமடித்து வெற்றிக்கு போராடினார். அதே போல மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் துருவ் ஜூரெல் 80 ரன் மற்றும் 68 ரன் என மொத்தம் 148 ரன்களை குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு போராடினார்.

இதன் காரணமாக பார்டர் - கவாஸ்கர் தொடரில் கே.எல் ராகுலுக்கு பதிலாக ஜூரெலுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் துருவ் ஜூரெல் போன்ற வீரர் ஆஸ்திரேலியாவில் அசத்துவதற்கு தேவையான திறமைகளை கொண்டுள்ளதாகவும், அவர் ஆஸ்திரேலிய ரசிகர்களை கவரப் போகிறார் எனவும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்தியாவுக்காக சில போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்த ஒரு பையன் உள்ளார். அவர் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் 63 என்ற சராசரியை கொண்டுள்ளார். அவருடைய பெயர் துருவ் ஜூரெல். அவர் பேட்டிங் செய்ததை பார்த்த போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்துவதற்கு தேவையான பொறுமை, திறன் இருப்பது தெரிந்தது. விக்கெட் கீப்பராக இருந்தாலும் அவர் இந்த தொடரில் விளையாடாமல் போனால் அது எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

23 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் இந்த சுற்றுப்பயணத்தில் தனது அணியின் மற்ற இந்திய வீரர்களை விட அதிக தரத்தை கொண்டிருப்பதாக தெரிகிறது. இந்திய துணை கண்டத்தைச் சேர்ந்த நிறைய வீரர்கள் இங்குள்ள சூழ்நிலைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள தடுமாறுவார்கள். ஆனால் ஜூரெல் அதை சரியாக செய்பவராக தெரிகிறார்.

மெல்போர்ன் மைதானத்தில் இருக்கும் அதிகப்படியான வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை அவர் சரியாக கையாண்டார். அந்தப் பையன் மீது கண்ணை வைத்துக் கொள்ளுங்கள். அவர் ஆஸ்திரேலிய ரசிகர்களை கவரப் போகிறார். அவர் நம்முடைய 3 வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அசத்தக் கூடியவராகவும் தெரிகிறார். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்