ரிங்கு சிங்கை 4வது இடத்தில் களம் இறக்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா
டர்பனில் திலக் வர்மாவை 6வது இடத்தில் விளையாட வைத்து, ரிங்குவை 4வது இடத்தில் பேட்டிங் செய்ய வைத்திருக்கலாம் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
புதுடெல்லி,
தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி டர்பனில் நேற்றிரவு நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாம்சன் 107 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்சே 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தொடர்ந்து 203 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சில் 17.5 ஓவர்களில் 141 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்க வீரர்கள் கிளாசன் 25 ரன்களும், கோட்சே 23 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி வீரர்கள் வருண் சக்கரவரத்தி, ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ரிங்கு சிங் 6வது இடத்தில் களம் இறங்கினார். இந்நிலையில், ரிங்கு சிங்கை 4வது இடத்தில் களம் இறக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நாம் ரிங்குவிடம் நியாயமாக நடந்து கொள்கிறோமா? என்பது முக்கிய கேள்வி. ஏனெனில் முதன்மை வீரராக அவரை நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். பேட்டிங் வரிசையில் மேலே அனுப்பிய போதும் அல்லது பவர் பிளேவில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்த போதும் ரிங்கு சிங் ரன்கள் குவித்துள்ளார்.
அங்கே அரை சதங்களை நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்துள்ள அவர் ஆபத்தில் உதவும் வீரராக உருவெடுத்துள்ளார். அப்படிப்பட்ட அவரை ஏன் நாம் 4வது இடத்தில் களமிறக்காமல் எப்போதும் 6வது இடத்தில் விளையாட வைக்கிறோம். டர்பனில் திலக் வர்மாவை 6வது இடத்தில் விளையாட வைத்து, ரிங்குவை 4வது இடத்தில் பேட்டிங் செய்ய வைத்திருக்கலாம்.
ஏனெனில் ரிங்குவால் பினிஷிங் செய்ய முடியும். ஆனால் பினிஷராக மட்டுமே அவரால் ஆட முடியும் என்று அர்த்தமில்லை. இதுவே என்னுடைய புரிதல். அவரால் சிக்ஸர்களை அடிக்க முடிகிறது. ஆனால் அவர் ஹர்டிக் பாண்ட்யா, ஆண்ட்ரே ரசல் போன்ற வலுவான உடலைக் கொண்டவர் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.