கோலி இல்லை... களத்தில் அந்த இந்திய வீரருடன் மோதுவது மிகவும் பிடிக்கும் - ஆஸ்திரேலிய வீரர்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளது.;
சிட்னி,
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.
ஏற்கனவே கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் காத்திருக்கிறது.
அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
முன்னதாக ஸ்லெட்ஜிங் செய்வதற்கு பெயர் போன ஆஸ்திரேலியா அணி களத்தில் வீரர்களிடம் வாய் வார்த்தைகள் வழியான தாக்குதல்களையும் தொடுக்கும். இதனால் வீரர்கள் அவற்றால் தூண்டப்பட்டு விரைவில் ஆட்டமிழந்து வெளியேறுவார்கள் என ஆஸ்திரேலியா அணிக்கு நம்பிக்கை உண்டு.
ஆனால் இதற்கு சற்றும் சளைக்காத விராட் கோலி தலைமையில் விளையாடிய இந்திய அணி பதிலடி கொடுத்தது. விராட் கோலி தலைமையில் விளையாடும்போது ஆஸ்திரேலிய வீரர்கள் எதாவது ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டால் அதற்கு தக்க பதிலடி அடுத்த நொடியே இந்திய அணியும் கொடுத்துவிடும்.
இந்திய அணியில் விராட் கோலிக்கு அடுத்ததாக வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் எதிரணிக்கு பதிலடி கொடுக்க அஞ்சமாட்டார் என்றே கூறலாம். இந்த சூழ்நிலையில் முகமது சிராஜுடன் களத்தில் மோதுவதை தான் ரசிப்பதாக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மார்னஸ் லாபுசாக்னே சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் இந்தியாவின் முகமது சிராஜ் உடன் பல காரணங்களுக்காக சண்டையிடுவதை ரசிக்கிறேன். நாங்கள் 2015 - 16ம் ஆண்டில் எம்ஆர்எப் அகாடமியில் இருந்தோம். அந்த அகாடமியில் சிராஜ் வேகப்பந்து வீச்சாளராக இருந்தார். அப்போதுதான் நாங்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்து விளையாடினோம். நான் அவரை முதன்முதலாக சந்தித்து விளையாடியபோது அவரது கெரியர் முன்னேற்ற வழியில் சென்றது. அவருக்கு விளையாட்டின் மீது மிகுந்த அன்பு, ஆர்வம் மற்றும் கற்றுக்கொள்வது என அனைத்தும் இருக்கிறது. இது போன்ற வித்தியாசமான அனுபவங்களில் இருந்து எங்களது தொழில் வாழ்க்கை நகர்வதை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சிகரமாக உள்ளது" என்று கூறினார்.