ரஞ்சி கோப்பையில் மராட்டிய அணியின் கேப்டனாக ருதுராஜ் தேர்வு

2024-2025 ம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை தொடரில் மராட்டிய அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-07-25 18:32 GMT

கோப்புப்படம்

மும்பை,

ஐ.பி.எல்.லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனைத்தொடர்ந்து ஜிம்பாப்வே டி20 தொடரில் 3 இன்னிங்ஸ்களில் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் ஒரு அரைசதம் உள்பட 163 ரன்களை விளாசினார். இதன் காரணமாக இலங்கை டி20 தொடருக்கு தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுப்மன் கில், ரியான் பராக் உள்ளிட்டோரை தேர்வு செய்துவிட்டு, ருதுராஜ் கெய்க்வாடை இந்திய அணி நிர்வாகம் புறந்தள்ளியது.

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இலங்கை தொடரில் வாய்ப்புக்கு கிடைக்காதது மிகப்பெரிய பேசு பொருள் ஆனது. மூத்த வீரர்களும், பயிற்சியாளர்களும் வீரர் தேர்வு செய்யும் ஆணையத்தின் மீது தங்கள் ஆதங்கத்தை கொட்டினர்.

இந்நிலையில் 2024-2025ம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை தொடரின் மராட்டிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். மராட்டிய கிரிக்கெட் சங்கம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே ஐ.பி.எல்., மராட்டிய பிரீமியர் லீக், சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே உள்ளிட்ட தொடர்களில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். தற்போது ரஞ்சி டிராபியிலும் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

மராட்டிய ரஞ்சி அணியில் ராகுல் திரிபாதி, சச்சின் தாஸ், விக்கி ஓஸ்ட்வால், பிரசாந்த் சொலங்கி, முகேஷ் சவுத்ரி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியின் பயிற்சியாளராக சுலக்ஷன் குல்கர்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த முறை கேப்டனாக இருந்த கேதர் ஜாதவ் ஓய்வை அறிவித்துள்ளதால், முன்னணி வீரரான ருதுராஜ் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்