ஐ.பி.எல். ஏலத்தில் விலை போகாத உள்ளூர் வீரர்.. டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் இவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.;
இந்தூர்,
17-வது சையத் முஷ்டாக் அலி டி20 தொடர் மும்பை, இந்தூர், ராஜ்கோட், ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் குஜராத் - திரிபுரா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த திரிபுரா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஸ்ரீதம் பால் 57 ரன்கள் அடித்தார். திரிபுரா தரப்பில் அதிகபட்சமாக நாக்வாஸ்வல்லா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் வெறும் 10. 2 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக உர்வில் படேல் வெறும் 35 பந்துகளில் 113 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த போட்டியின் ஆட்ட நாயகனாகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் 15 பந்துகளில் அரை சதம் அடித்த அவர் 28 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் ரிஷப் பண்ட் 35 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள உர்வில் படேல் புதிய சாதனை படைத்துள்ளார்.
சமீபத்தில் முடிவடைந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தில் உள்ளூர் வீரர்கள் பட்டியலில் ரூ. 30 லட்சத்திற்கு இடம்பெற்றிருந்த இவரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.