கிரிக்கெட் அனைவரது கவனத்தையும் பெறுவது வருத்தமளிக்கிறது: சாய்னா நேவால்
கிரிக்கெட் மக்களின் இதயங்களில் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளதாக சாய்னா நேவால் கூறியுள்ளார்.
மும்பை,
கடந்த மாதம் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. 11 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை இந்தியா வென்றதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், ஆடிப்பாடியும் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், இந்திய அணியின் சாதனையைப் பாராட்டி, அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், மாநில அரசுகளும் வீரர்களுக்கு ரொக்கப் பரிசுகளை அறிவித்தன.
இந்த நிலையில், கிரிக்கெட்டை போல் மற்ற விளையாட்டுகளுக்கும் மக்கள் அதே கவனத்தை கொடுக்க வேண்டுமென பேட்மிண்டன் வீராங்கணை சாய்னா நேவால் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறி இருப்பதாவது;
"கிரிக்கெட் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதை எண்ணி வருத்தமடைகிறேன். கிரிக்கெட்டை விட பேட்மிண்டன், கூடைப்பந்து, டென்னிஸ் மற்றும் பிற விளையாட்டுகள் உடல் ரீதியாக மிகவும் கடினமானது. சில விளையாட்டுகளில் மூச்சு விடுவது கூட கடினம்.
இந்தியாவில் கிரிக்கெட்டை விமர்சிப்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஏனெனில் கிரிக்கெட் மக்களின் இதயங்களில் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளது. கிரிக்கெட்டைப் பற்றி நான் தவறாகச் சொன்னாலும், கிரிக்கெட் இன்னும் பிரபலம் தான் அடையும். ஏனென்றால் அது அனைவருக்கும் பிடிக்கும். எனக்கும் பிடிக்கும்
ஆனால் மக்கள் மற்ற விளையாட்டுகளுக்கும் அதே கவனத்தை கொடுக்க வேண்டும். இல்லையெனில், இந்தியா எப்படி விளையாட்டு நாடாக மாறும்? கிரிக்கெட்டுக்கே முன்னுரிமை கொடுத்தால் ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்களை வெல்லும் சீனாவை எப்படி முந்த முடியும்?"
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.