ஐ.பி.எல். மெகா ஏலம் - தவிர்த்த முன்னாள் சி.எஸ்.கே. வீரர்

வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் ஐ.பி.எல்.மெகா ஏலம் நடைபெறும்.

Update: 2024-11-06 10:51 GMT

லண்டன், 

ஐ.பி.எல். 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது . ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது சவுதிஅரேபியா தலைநகர் ரியாத்தில் இந்த மாத இறுதியில் நடக்க உள்ளது. இந்த தகவல் அனைத்து அணி நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் மெகா ஏலம் நடைபெறும்.

அதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணிகள் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல்-லில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்களை அறிவித்துவிட்டன.அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வீரர்களை தக்கவைத்துள்ளது. அதன்படி எம்.எஸ்.தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே மற்றும் மதீசா பதிரானா ஆகிய 5 வீரர்களை அந்த அணி தக்கவைத்துள்ளது.கடந்த 8 ஆண்டுகளாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடிய கேப்டன் ரிஷப் பண்ட் விடுவிக்கப்பட்டுள்ளார். பல்வேறு அணிகளில் அதிர்ச்சி அளிக்கக் கூடிய வகையில் முக்கிய வீரர்கள் கழற்றி விடப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார் . ஏலத்தில் 1,574 வீரர்களின் பெயர்கள் இடம்பிடித்துள்ளன. இந்த பட்டியலில் பென் ஸ்டோக்ஸ் பெயர் இடம்பெறவில்லை. கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த 2023-ம் ஆண்டு பென் ஸ்டோக்ஸ் விளையாடினார்.

ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்யாத வெளிநாட்டு வீரர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாது என்ற புதிய விதி உள்ளது. இதனால் பென் ஸ்டோக்ஸ் இரண்டு ஆண்டுகள் ஐ.பி.எல். போட்டிகளிலும் விளையாட முடியாது.

Tags:    

மேலும் செய்திகள்