ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை தொடக்கம்; முதல் ஆட்டத்தில் கொல்கத்தா-பெங்களூரு அணிகள் மோதல்
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் நாளை தொடங்குகிறது.;

Image Courtesy: @IPL
கொல்கத்தா,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் நாளை தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் ஆட்டத்தில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. லீக் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். மே 18ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைகிறது. பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் மே 20ம் தேதி தொடங்குகிறது.
இந்த தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி இந்த முறை அஜிங்யா ரகானே தலைமையிலும், பெங்களூரு அணி ரஜத் படிதார் தலைமையிலும் களம் இறங்குகிறது.
புதிய கேப்டன்கள் தலைமையில் களம் காணும் இரு அணிகளும் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்க கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் தொடக்க விழா நடைபெறுகிறது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.