ஐ.பி.எல்.: ரிஷப் பண்டை ஏலத்தில் வாங்க போகிறோமா..? சி.எஸ்.கே. நிர்வாகி பதில்
அடுத்த ஐ.பி.எல். தொடரில் ரிஷப் பண்ட் சென்னை அணியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.;
மும்பை,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணிகள் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஐ.பி.எல்-லில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரங்களை அறிவித்துவிட்டன.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வீரர்களை தக்கவைத்துள்ளது. அதன்படி எம்.எஸ்.தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே மற்றும் மதீசா பதிரானா ஆகிய 5 வீரர்களை அந்த அணி தக்கவைத்துள்ளது.
கடந்த 8 ஆண்டுகளாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடிய கேப்டன் ரிஷப் பண்ட் விடுவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் பெரிய தொகைக்கு நாங்கள் யாரையும் வாங்கப்போவதில்லை என சி.எஸ்.கே அணியின் மூத்த நிர்வாகியான காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "வீரர்களை தக்க வைப்பதற்கு முன்பதாகவே தற்போதைய கேப்டன் ருதுராஜ் மற்றும் முன்னாள் கேப்டன் தோனி பயிற்சியாளர் பிளெமிங் ஆகியோருடன் அணி நிர்வாகம் சார்பாக நாங்கள் ஏற்கனவே விவாதித்து விட்டோம். முந்தைய ஆண்டுகளில் அணிக்காக நம்பகத்தன்மையுடன் விளையாடிய வீரர்களை நாங்கள் தக்க வைத்து தெளிவான முடிவை எடுத்துள்ளோம். மேலும் தற்போது குறைந்த கையிருப்பு பணத்துடன் நாங்கள் ஏலத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் பெரிய அளவில் எந்த ஒரு வீரரையும் போட்டி போட்டு ஏலத்தில் எடுக்க முடியாது. இருந்தபோதும் முடிந்தவரை முயற்சி செய்வோம்" என்று கூறினார்.