இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: வெற்றி பெறப்போவது யார்..? - ஹெய்டன் கணிப்பு

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் வெற்றியாளரை ஹெய்டன் கணித்துள்ளார்.

Update: 2024-10-29 13:52 GMT

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.

காலம் காலமாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா 2018/19-ம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது. அதே போல 2020/21 தொடரில் ரகானே தலைமையில் இந்தியா 2 - 1 என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை வென்றது.

ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் இந்தியா வீழ்த்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.

ஆனால் கடந்த 2 தோல்விகளுக்காக இம்முறை இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து 3 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும் என்று ரிக்கி பாண்டிங் சமீபத்தில் கணித்திருந்தார். அதே போல இந்தியாவை வீழ்த்த காத்திருப்பதாக கேப்டன் பேட் கம்மின்ஸ், நாதன் லயன் போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள் சமீபத்தில் கூறியிருந்தனர். இதனால் இந்த தொடர் மீது இப்போதே எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் என்னதான் இம்முறை இந்தியா போராடினாலும் ஆஸ்திரேலியா வெல்லும் என்று முன்னாள் வீரர் மேத்தியூ ஹெய்டன் கணித்துள்ளார். அதே சமயம் இந்தியா சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய சவால் கொடுப்பதையும் பார்க்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-"இம்முறை ஆஸ்திரேலியா வெல்லும் என்று நான் சொல்வேன். அதே சமயம் வெற்றிக்காக இந்திய அணி சவால் கொடுக்கும் என்றும் நான் சொல்வேன். தற்போது ஆஸ்திரேலியாவில் தற்காலிகமாக பதியப்பட்ட பிட்ச்கள் (டிராப் இன்) இருக்கின்றன. அது முந்தைய இயற்கையான பிட்ச்களை விட சவாலாக இருக்கும். அதன் காரணமாக ஆஸ்திரேலியா தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடும் சாதகத்தை அதிகமாக பெறும் என்று நான் கருதவில்லை.

ஆஸ்திரேலியாவில் பெர்த், அடிலெய்ட், மெல்போர்ன் ஆகிய மைதானங்களில் டிராப் இன் பிட்ச்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே பிரிஸ்பேன் மற்றும் சிட்னியில் மட்டுமே இயற்கையான ஆடுகளங்கள் இருக்கும். அங்கே 3, 5வது போட்டிகள் நடைபெற உள்ளன. அங்கே வித்தியாசமான கலவையுடன் விளையாட நேரிடலாம். அப்படி மாறுபட்ட பிட்ச் சூழ்நிலைகள் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு சொந்த மண்ணில் அதிக சாதகம் இருக்கும் என்று நான் கருதவில்லை" எனக் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்