வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20; விதிமுறைகளை மீறிய இங்கிலாந்து வீரர்-அபராதம் விதித்த ஐ.சி.சி

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரீஸ் டாப்லீ ஐ.சி.சி. விதிமுறைகளை மீறியதாக கூறப்படுகிறது.

Update: 2024-11-13 09:55 GMT

Image Courtesy: AFP

பிரிட்ஜ்டவுன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து, 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லீ ஐ.சி.சி.யின் விதி 2.2-ஐ மீறியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த விதியின்படி, சர்வதேச போட்டிகளில் ஆடுகளத்தின் பொருட்களையோ அல்லது கிரிக்கெட் உபகரணங்களையோ, ஆடைகளையோ அவமதித்தால் அபராதம் என்று கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

ரீஸ் டாப்லீ நாற்காலியை எடுத்து படிக்கட்டின் கைப்பிடிகளை ஓங்கி அடித்தார். இதற்காக போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தை ரீஸ் டாப்லீ ஏற்றுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்