விராட் கோலி குறித்த அந்த விமர்சனத்தை வாபஸ் பெற மாட்டேன் - முகமது ஹபீஸ் அதிரடி

கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் விராட் கோலி தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடினார் என்று ஹபீஸ் வெளிப்படையாக விமர்சித்திருந்தார்.

Update: 2024-06-21 09:37 GMT

கராச்சி,

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். கடந்த 2008-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு இந்தியாவின் மேட்ச் வின்னராக அவதரித்தார்.

அப்போதிலிருந்து உலகின் அனைத்து எதிரணிகளையும் பந்தாடி வரும் அவர் 26000+ ரன்களையும் 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். மூன்று வகையான கிரிக்கெட்டிலும் மாபெரும் பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் விராட் கோலி இன்றளவும் வளர்ந்து வரும் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.

அதே சமயம் பல்வேறு நேரங்களில் அவர் சுயநலத்துடன் சொந்த சாதனைக்காக விளையாடுகிறார் என்று சிலர் விமர்சிப்பதும் வாடிக்கையாகும். முன்னதாக இந்தியாவில் கடந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையில் 765 ரன்கள் குவித்து சாதனை படைத்த விராட் கோலி இந்தியா பைனல் வரை செல்ல முக்கிய பங்காற்றினார்.

ஆனால் அத்தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவர் சுயநலத்துடன் விளையாடியதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஹபீஸ் விமர்சித்தார். அந்தப் போட்டியில் 121 பந்துகளில் 101 ரன்கள் அடித்த விராட் கோலி 90 ரன்கள் கடந்ததும் கொஞ்சம் மெதுவாக விளையாடினார்.

அதனால் ரோகித் சர்மா மட்டுமே இந்தியாவுக்காக சுயநலமின்றி விளையாடியதாகவும் விராட் கோலி தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடினார் என்றும் ஹபீஸ் வெளிப்படையாக விமர்சித்தார். இந்நிலையில் அந்த கருத்தை ஏன் சொன்னீர்கள்? திரும்பப் பெற விரும்புகிறீர்களா? என்று ஆடம் கில்கிறிஸ்ட் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கேட்டார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த ஹபீஸ் மறுபடியும் விராட் கோலியை சுயநலவாதி என்று சொன்னதை நியாயப்படுத்தி பேசியது பின்வருமாறு:-

"சூழ்நிலையை மொத்தமாக பார்த்தால் அப்போது நான் சொன்னது சரி என்றே நினைக்கிறேன். என்னை பொறுத்த வரை விளையாடுவது யார் என்பது முக்கியமல்ல. உங்களுடைய எண்ணம் அணியை வெற்றி பெற வைப்பதாக இருக்க வேண்டும். ஆனால் ஒருவர் 90 ரன்கள் கடந்ததும் அதிரடியாக விளையாடத் தயங்கினால் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

குறிப்பாக 95 ரன்கள் கடந்ததும் அடுத்த 5 பந்துகளில் 100 ரன்களை தொட்டால் அவருடைய எண்ணம் சதமடிப்பதாகும். ஒருவேளை அப்படி இல்லையென்றால் ஏன் அவர் 92 அல்லது 95 ரன்னில் அதிரடியாக விளையாடா பயப்பட வேண்டும்?.

என்னை பொறுத்த வரை அணியின் வெற்றிக்காக உங்களுடைய எண்ணம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். எனவே அங்கே பெரிய ஷாட்டுகளை அடிக்க முயற்சிக்காத விராட் கோலி சதத்தை தொடுவதற்கு அதிக பந்துகளை எடுத்துக் கொண்டதாக உணர்ந்தேன்.அந்த போட்டியை இப்போது நீங்கள் பார்த்தாலும் நான் சொல்வதை புரிந்து கொள்ள முடியும்.

அணியின் வெற்றியை விட தனிப்பட்ட சாதனைகள் இரண்டாவதாக இருக்க வேண்டும். தோல்வியை சந்திக்கும் போட்டிகளில் அடிக்கப்படும் 50, 100 ரன்களை நான் பாராட்ட மாட்டேன். கிரிக்கெட்டில் 1 ரன் கூட வித்தியாசத்தை ஏற்படுத்தும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்