தோனியை தேர்வு செய்யாமல் பெரிய தவறு செய்துவிட்டேன் - தினேஷ் கார்த்திக் பேட்டி

இந்தியாவின் ஆல் டைம் ஆடும் லெவனை தினேஷ் கார்த்திக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.

Update: 2024-08-23 04:29 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக். இவர் இந்திய அணிக்காக மூன்று வித கிரிக்கெட்டிலும் ஆடி உள்ளார். அதுமட்டுமில்லாமல் 257 ஐ.பி.எல் போட்டிகளிலும் ஆடி உள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன்னர் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

இந்நிலையில், அதிரடி வீரரான தினேஷ் கார்த்திக் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தக்கூடிய தரமான வீரர்களை கொண்ட இந்தியாவின் ஆல் டைம் ஆடும் லெவனை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். அந்த அணியில் இந்தியாவுக்காக 3 விதமான ஐ.சி.சி கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டனான தோனிக்கு இடம் இல்லாதது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இது குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் ஆல் டைம் லெவன் அணியை தேர்வு செய்யும் தருணத்தில் தோனியின் பெயரை மறந்தார் போல் தவற விட்டு விட்டதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, தோழர்களே நான் பெரிய தவறு செய்து விட்டேன். அது பொதுவான தவறாகும். 11 வீரர்களை நான் தேர்ந்தெடுக்கும் போது நிறைய விஷயங்கள் நடந்தது.

அப்போது நான் கீப்பரை தேர்ந்தெடுக்க மறந்து விட்டேன். அதிர்ஷ்டவசமாக அந்த அணியில் ராகுல் டிராவிட் இருந்ததால் அவரை நான் விக்கெட் கீப்பராக தேர்ந்தெடுத்ததாக அனைவரும் நினைத்தனர். ஆனால் ராகுல் டிராவிட்டை நான் கீப்பராக கருதவில்லை. உண்மையில் விக்கெட் கீப்பரான நான் கீப்பரை தேர்ந்தெடுக்க மறந்து விட்டேன்.

என்னைப் பொறுத்த வரை தோனி அனைத்து வகையான பார்மெட்டிலும் இருக்கக்கூடியவர். அவர் கிரிக்கெட்டில் விளையாடிய மகத்தான வீரர்களில் ஒருவர். எனவே ஏற்கனவே நான் தேர்ந்தெடுத்த அணியில் ஒரு மாற்றத்தை செய்ய முடிந்தால் தோனி 7வது இடத்தில் இருப்பார். மேலும், அவர் அனைத்து வடிவிலான இந்திய அணியின் கேப்டனாகவும் இருப்பார். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்