மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் - ஐ.பி.எல். ஏலம் குறித்து டு பிளெஸ்சிஸ்
டு பிளெஸ்சிஸ் இதுவரை 145 ஐ.பி.எல் போட்டிகளில் ஆடி 37 அரைசதத்துடன் 4571 ரன்கள் குவித்துள்ளார்.;
கேப்டவுன்,
2025 ஐ.பி.எல். தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலம் நாளை, நாளை மறுநாள் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் கடந்த அக்டோபர் 31-ம் தேதி அன்று தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருந்தன.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் 5 வீரர்களை தக்க வைத்துள்ளது. பஞ்சாப் 2, பெங்களூரு 3, டெல்லி 4, ராஜஸ்தான் ராயல்ஸ் 6 வீரர்களை தக்க வைத்துள்ளது.
ஆச்சரியம் அளிக்கும் வகையில் ரிஷப் பண்ட் (டெல்லி), லோகேஷ் ராகுல் (லக்னோ), ஸ்ரேயஸ் ஐயர் (கொல்கத்தா), அர்ஷ்தீப் சிங் (பஞ்சாப்) போன்ற முன்னணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அதேபோல் பெங்களூரு அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த டு பிளெஸ்சிஸ் ஏலத்திற்கு வருகிறார்.
இந்நிலையில், ஐ.பி.எல். ஏலம் குறித்து டு பிளெஸ்சிஸ் சில கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஏலத்தைப் பற்றி எனக்கு தெரியாது. அங்கு என்ன நடக்கும் என்று கணிக்கவும் முடியாது. நவம்பர் 24-ல் (நாளை) என்ன நடக்குமென காண, அனைவருமே ஆர்வமாக காத்திருக்கிறார்கள். எனக்கு என்ன நடக்குமென எந்த திட்டமும் இல்லை. மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
டு பிளெஸ்சிஸ் இதுவரை 145 ஐ.பி.எல் போட்டிகளில் ஆடி 37 அரைசதத்துடன் 4571 ரன்கள் குவித்துள்ளார். கடந்த வருடம் ஆர்.சி.பி. கேப்டனாக செயல்பட்ட டு பிளெஸ்சிஸ் 438 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.