அவர் கபில் தேவ் போன்றவர் - இந்திய ஆல் ரவுண்டருக்கு பிளெமிங் புகழாரம்

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களாக தேர்வாகியுள்ளனர்.

Update: 2024-06-05 12:47 GMT

வெலிங்டன்,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் 17 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களாக தேர்வாகியுள்ளனர்.

குறிப்பாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதால் ஷிவம் துபே முதல் முறையாக இந்தியாவுக்காக உலகக்கோப்பையில் விளையாட தேர்வாகியுள்ளார். 2019-ல் அறிமுகமாகி சுமாராக செயல்பட்ட அவரை இந்திய அணி நிர்வாகம் கழற்றி விட்டது. அதேபோல ஐபிஎல் தொடரிலும் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளில் தடுமாற்றமாகவே செயல்பட்ட அவரை 2022 சீசனில் சிஎஸ்கே நிர்வாகம் வாங்கியது.

அந்த வாய்ப்பில் 2023 சீசனில் தனது கெரியரிலேயே உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் சிஎஸ்கே 5வது கோப்பையை வெல்ல உதவினார். அதே வேகத்தில் இந்த வருடமும் ஓரளவு நன்றாக செயல்பட்டதால் அவருக்கு உலகக்கோப்பை வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் ஐபிஎல் தொடரில் அவருக்கு சிஎஸ்கே நிர்வாகம் பவுலிங் செய்வதற்கு பெரியளவில் வாய்ப்பு வழங்கவில்லை.

இந்நிலையில் இந்திய ஜாம்பவான் கபில் தேவ் போல ஷிவம் துபே பவுலிங் திறமையை கொண்டவர் என்று சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பாராட்டியுள்ளார். இருப்பினும் இம்பேக்ட் வீரர் விதிமுறையால் சிஎஸ்கே அணியில் அவருக்கு அதிகமாக பவுலிங் செய்யும் வாய்ப்பை கொடுக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"அவருடைய பவுலிங் மற்றும் அதைப் பற்றி பேசும் விதம் என்றால் அவர் கபில் தேவ் போன்றவர். அவர் மிகவும் கடினமாக உழைத்து வருகிறார். அவர் ஐபிஎல் தொடரில் கடினமாக உழைத்தார். ஆல் ரவுண்டராக செயல்படக்கூடிய பல வீரர்கள் எங்களிடம் இருந்தனர். ஆனால் இம்பேக்ட் வீரர் விதிமுறையினால் அவரை சரியாக பயன்படுத்த முடியவில்லை. அவர் தனது பந்து வீச்சை செய்து வருகிறார். சரியான சூழ்நிலைகளில் அவருடைய வேகத்தை மாற்றி மெதுவாக வீசும் கட்டர் பந்துகள் போட்டியில் முக்கிய பங்காற்றலாம். அந்த வகையில் அவர் தன்னுடைய வேலையை செய்ய முடியும். அதற்காக அவர் கடினமாக உழைத்துள்ளார்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்