இப்போதும் பாண்ட்யா இந்திய அணியின் கேப்டனாக முடியும் - ராபின் உத்தப்பா

கேப்டனாக நியமிக்கப்படாததற்கு ஹர்திக் பாண்ட்யா வருந்த கூடாது என ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-23 10:22 GMT

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி விரைவில் இலங்கைக்கு சென்று அந்த நாட்டு அணிக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. 20 ஓவர் ஆட்டங்கள் வருகிற 27, 28, 30-ம் தேதிகளில் பல்லகெலேவிலும், ஒரு நாள் போட்டிகள் ஆகஸ்டு 2, 4, 7-ம் தேதிகளில் கொழும்பிலும் நடைபெறுகிறது.

இலங்கை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான கமிட்டியினர், புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோரின் ஆலோசனைக்கு பிறகு அணி பட்டியல் இறுதி செய்து வெளியிடப்பட்டது.

உலகக்கோப்பையை வென்றதுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா விடைபெற்று விட்டதால் இந்திய 20 ஓவர் அணியின் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. உலகக்கோப்பையில் துணை கேப்டனாக பணியாற்றிய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.

ஆனால் பாண்ட்யாவுக்கு அடிக்கடி உடல்தகுதி பிரச்சினை ஏற்படுவதால் அவருக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமிப்பதே சரியாக இருக்கும் என்பது பயிற்சியாளர் கம்பீரின் விருப்பமாக இருந்தது. முடிவில் இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன்ஷிப் 33 வயதான சூர்யகுமார் யாதவிடம் வழங்கப்பட்டுள்ளது.

துணை கேப்டன் பதவியும் பாண்ட்யாவிடம் இருந்து பறிக்கப்பட்டு இருக்கிறது. சுப்மன் கில் இனி துணை கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வுக்குழு பாண்ட்யாவுக்கு அநியாயத்தை செய்து விட்டதாக ஸ்ரீகாந்த், சஞ்சய் பங்கர் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

இந்நிலையில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா இதற்காக வருந்தக்கூடாது என முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். அத்துடன் சூரியகுமார் காயத்தை சந்தித்தால் டி20 கேப்டன்ஷிப் பாண்ட்யாவுக்கு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "உண்மையில் பாண்ட்யாவின் இடத்தில் நான் இருந்திருந்தால் குறிப்பிட்ட அளவிற்கு என்னை கவனித்துக் கொள்வேன். ஏனெனில் இந்திய கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் என்பது மிகவும் அரிதான பொருளாகும். குறிப்பாக நான் பாண்ட்யாவை போல இருந்தால் நீண்ட காலம் தொடர்ந்து விளையாடுவதற்கு விரும்புவேன். அந்த வேளையில் கேப்டன்ஷிப் பறிக்கப்பட்டால் பரவாயில்லை நாட்டுக்காக சரி என்று நான் சொல்வேன். ஆம் இந்தியாவின் கேப்டனாக நாட்டை வழி நடத்துவது நினைத்துப் பார்க்க முடியாத மிகப்பெரிய கவுரவம்.

இருப்பினும் கேப்டன்ஷிப் பொறுப்பு இல்லாமலேயே நீண்ட காலம் விளையாடி உங்களால் நாட்டுக்காக முடிந்தளவுக்கு நிறைய சாம்பியன் பட்டங்களை வென்று கொடுக்க முடியும். தற்போது பாண்ட்யாவால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தயாராக இருக்க முடிகிறது. எனவே அவரது இடத்தில் நான் இருந்தால் அனைத்தையும் கடவுளின் கையில் விட்டு விடுவேன். ஒருவேளை கடவுள் நினைத்து சூர்யகுமார் காயமடையும் சூழ்நிலை வந்தால் இந்திய அணியை வழி நடத்துவதற்கு நான் (பாண்ட்யா) எப்போதும் தயாராக இருப்பேன்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்