என் வாழ்நாளில் பார்த்திராத ஒன்று: தோனியின் ஆட்டம் குறித்து நெகிழ்ந்த ஆஸ்திரேலிய வீரர்

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் போது தோனிக்கு ரசிகர்கள் அளிக்கும் ஆதரவு நம்ப முடியாத அளவு இருப்பதாக ஆஸ்திரேலிய வீரர் கூறியுள்ளார்.

Update: 2024-11-08 07:40 GMT

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த 2020-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். எனினும், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். வரும் ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடரிலும் சென்னை அணிக்காக தோனி விளையாட உள்ளார்.

இதனால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தோனியை பொறுத்தவரை ஐபிஎல் போட்டியின் போது எந்த மைதானத்திற்கு சென்றாலும் அவருக்கே ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கும். அவர் களத்திற்கு வந்தாலே போதும்,ரசிகர்கள் சத்தம் மைதானமே குலுங்கும் அளவுக்கு இருக்கும். தோனிக்கு கிடைக்கும் இத்தகைய பெரும் வரவேற்பை நான் எங்குமே கண்டது இல்லை என ஆஸ்திரேலிய வீரர் ஜேக் ப்ரேசர் மெக்கர்க் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் ஜேக் ப்ரேஸர் மெக்கர்க் கூறியிருப்பதாவது:-

டெல்லி அணிக்காக எங்களின் சொந்த மைதான (ஹோம் கிரவுண்ட்) போட்டிகளை விசாகப்பட்டினத்தில் ஆடினோம். எங்களின் ஹோம் கிரவுண்ட் என்பதால் மைதானம் முழுவதும் நீல நிற ஜெர்சிக்களாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், ரசிகர்கள் அத்தனை பேரும் தோனி பெயர் பொறிக்கப்பட்ட மஞ்சள் ஜெர்சியை அணிந்து வந்திருந்தார்கள். இதை பார்க்கும் போதே எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதன்பிறகு தோனி பேட்டிங் செய்ய வரும் போது, ரசிகர்கள் எழுப்பிய ஆரவாரம் போன்று நான் இதற்கு முன் பார்த்ததே இல்லை. அந்த அளவுக்கு மைதனத்தில் சத்தம் இருந்தது. நான் என் காதுகளை பொத்திக் கொண்டேன்.

அதன்பின் உள்ளே வந்து தோனி ஒரு சிக்சரை விளாசினார். அப்போது ரசிகர்கள் எழுப்பிய ஆரவாரம் இன்னும் பெரிதாக இருந்தது. என் வாழ்நாளில் அப்படிப்பட்ட வரவேற்பையும் ஆரவாரத்தையும் நான் பார்த்ததே இல்லை. ஒரே ஒரு வீரருக்காக இவ்வளவு அன்பும் செலுத்தப்படுகிறது என்பதை நம்பவே முடியவில்லை" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்