ஐ.பி.எல். வரலாற்றில் 2-வது போட்டியாக மாபெரும் சாதனை படைத்த சென்னை - பெங்களூரு ஆட்டம்
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதின.;

image courtesy: PTI
சென்னை,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கேறிய 8-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரஜத் படிதார் 51 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் நூர் அகமது 3 விக்கெட்டுகளும், பதிரனா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் 197 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 146 ரன்களே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 41 ரன்கள் அடித்தார். பெங்களூரு தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், யாஷ் தயாள், லிவிங்ஸ்டன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 342 ரன்கள் அடித்துள்ளன. ஆனால் இரு அணிகளிலும் வீரர்களுக்கு இடையே ஒரு 50+ ரன்கள் பார்ட்னர்ஷிப் கூட அமையவில்லை.
இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு 50+ ரன்கள் கூட பார்ட்னர்ஷிப் அமைக்காமல் அதிக ரன்கள் அடிக்கப்பட்ட 2-வது போட்டியாக இந்த சென்னை - பெங்களூரு ஆட்டம் மாபெரும் சாதனை படைத்துள்ளது. இதில் ராஜஸ்தான் - பெங்களூரு இடையே கடந்த சீசனில் (2024) 346 ரன்கள் அடிக்கப்பட்டதே சாதனையாக தொடருகிறது.
அந்த பட்டியல்:-
1. ராஜஸ்தான் - பெங்களூரு - 346 ரன்கள்
2. சென்னை - பெங்களூரு - 342 ரன்கள்
3. சென்னை - ராஜஸ்தான் - 331 ரன்கள்
4. மும்பை - பஞ்சாப் - 327 ரன்கள்
5. பெங்களூரு - டெல்லி - 325 ரன்கள்