கேமரூன் கிரீன் அரைசதம்.. ஸ்காட்லாந்தை ஒயிட்வாஷ் செய்த ஆஸ்திரேலியா

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றியுள்ளது.

Update: 2024-09-07 16:14 GMT

எடின்பர்க்,

ஸ்காட்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றிவிட்டது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பிரண்டன் மெக்முலன் 56 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. பிரெசர் மெகுர்க் டக் அவுட் ஆகியும், டிராவிஸ் ஹெட் 12 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இதனையடுத்து கை கோர்த்த கேப்டன் மிட்செல் மார்ஷ் - கேமரூன் கிரீன் ஜோடி சேர்ந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். அதிரடியாக விளையாடிய கேமரூன் கிரீன் அரைசதம் அடித்து அசத்தினார். இதனிடையே மிட்செல் மார்ஷ் 31 ரன்களிலும், டிம் டேவிட் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இருப்பினும் கிரீன் ஆட்டமிழக்காமல் 62 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்து அணியை வெற்றி பெற வைத்தார். வெறும் 16.1 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஆஸ்திரேலியா 153 ரன்கள் அடித்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றி ஸ்காட்லாந்தை ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்