பாக்சிங் டே டெஸ்ட்: ஆஸி. அதிரடி பந்து வீச்சு - 'டிரா' செய்ய போராடும் இந்தியா
பாக்சிங் டே டெஸ்ட்டில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.;
மொல்போர்ன்,
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4வது டெஸ்ட் போட்டி கடந்த 26ம் தேதி தொடங்கியது. பாக்சிங் டே என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து, 105 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பாக்சிங் டே டெஸ்ட்டில் வெற்றிபெற இந்தியாவுக்கு 340 ரன்களை இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது.
ஆட்டத்தின் கடைசி நாளான இன்று 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறக்கியது. ஆனால், ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பந்து வீச்சால் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
ரோகித் சர்மா 9 ரன்னிலும், கேஎல் ராகுல் ரன் எதுவும் எடுக்காமலும் (0 ரன்), கோலி 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இந்திய அணி 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஜெய்ஸ்வால் 14 ரன்னுடன் களத்தில் உள்ளார். ஆட்டத்தின் கடைசி நாளான இன்று தற்போது உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சிறிது நேரத்தில் ஆட்டம் மீண்டும் தொடங்க உள்ளது. 3 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்தியா வெற்றிபெற இன்னும் 307 ரன்கள் தேவைப்படுகிறது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் இப்போட்டியை டிரா செய்ய இந்தியா போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, இப்போட்டியில் வெற்றிபெற இந்திய அணியின் எஞ்சிய 7 விக்கெட்டுகளையும் வீழ்த்த ஆஸ்திரேலியா முழு முயற்சி மேற்கொள்ளும் என்பது உறுதியாகியுள்ளது. இதனால், ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.