பார்டர்-கவாஸ்கர் டிராபி; பும்ரா பந்துவீச்சை எதிர்கொள்ள தயாராக உள்ளேன் - ஆஸ்திரேலிய இளம் வீரர்

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது.

Update: 2024-11-12 11:14 GMT

Image Courtesy: AFP

பெர்த்,

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. இதையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது.

இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. தற்போது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திர துவக்க வீரர் டேவிட் வார்னர் இந்த வருடம் ஓய்வு பெற்றார்.

அவருக்கு பதிலாக இம்முறை நாதன் மெக்ஸ்வீனி எனும் புதிய வீரர் தொடக்க வீரராக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் சமீபத்தில் இந்தியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் சிறப்பாக செயல்பட்டார். இந்நிலையில் இந்தியாவின் ஜஸ்ப்ரீத் பும்ரா பந்துவீச்சை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும், அவருக்கு எதிராக பெரிய ரன்கள் குவிப்பதற்கான திட்டங்களை வகுத்து வருவதாகவும் ஆஸ்திரேலிய இளம் வீரரான மெக்ஸ்வீனி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, பெர்த் நகரில் நடைபெறும் முதல் போட்டிக்கு நான் செல்லும் போது பயிற்சிகளையும் திட்டங்களையும் எடுத்துச் செல்வேன். இந்திய பவுலர்கள் எப்படி பந்து வீசுவார்கள் என்பதை அறிந்து கொள்ள நான் சில வீடியோக்களையும் பார்த்துள்ளேன். புதிய பவுலர்களை அவர்களுடைய ஆக்சன் காரணமாக சிறப்பாக எதிர்கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கும். இருப்பினும் அதை செய்வதற்கு முன்பாக எனக்கு ஒரு வாரம் இடைவெளி இருக்கிறது. அதை பயன்படுத்தி இந்தியாவை சிறப்பாக எதிர்கொள்ள நன்கு தயாராக இருப்பேன் என்று நம்புகிறேன்.

பும்ரா எப்படி வீசுவார் என்பதை கணிப்பது கடினம். ஏனெனில் அவரிடம் தனித்துவமான பவுலிங் ஆக்சன் இருக்கிறது. அவர் உலகின் சிறந்த பவுலர். இருப்பினும் சரியான திட்டங்களை வைத்து அவர் உட்பட அனைவரையும் திறம்பட எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன். தற்போது நான் நன்றாக தயாராக இருக்கிறேன். இன்னும் நான் முன்னேறுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது. எனவே என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்