பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை; இந்திய கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தான் செல்ல அனுமதி மறுப்பு
பாதுகாப்பு பிரச்சினை காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.
புதுடெல்லி,
பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 23-ந் தேதி முதல் அடுத்த மாதம் 3-ந் தேதி வரை பாகிஸ்தானில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்க இந்திய அணி பஞ்சாப் மாநிலம் வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டு இருந்தது.
ஆனால் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. ஏற்கனவே ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தான் பயணிப்பதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி விலகினாலும் பார்வையற்றோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.