பெங்களூரு டெஸ்ட் : மழை காரணமாக 5வது நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்
107 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து தனது 2வது இன்னிங்சை தொடங்கியது
பெங்களூரு,
இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது. 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 402 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா 134 ரன், கான்வே 91 ரன், டிம் சவுதி 65 ரன் எடுத்தனர். இதையடுத்து 366 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 462 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அபாரமாக ஆடிய சர்பராஸ் கான் 150 ரன்னிலும், ரிஷப் பண்ட் 99 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இதன் காரணமாக 107 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.ஜஸ்ப்ரீத் பும்ரா 4 பந்துகள் வீசிய நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக 4ம் நாள் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பட்டது.
5வது நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது .இந்த நிலையில் தற்போது பெங்களுருவில் மழை பெய்து வருவதால் 5வது நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து ஆட்டம் தொடங்கப்படவில்லை என்றால் போட்டி டிராவில் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .