ரிஷப் பண்ட் அவுட் சர்ச்சை: ஏபி டி வில்லியர்ஸ் விமர்சனம்

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பண்ட் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார்.

Update: 2024-11-03 10:19 GMT

மும்பை,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் 2 போட்டிகளிலேயே நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது.

3-வது நாளுக்குள்ளேயே முடிவடைந்த இந்த போட்டியில் நியூசிலாந்து 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.

முன்னதாக இந்த கடைசி போட்டியில் நியூசிலாந்து நிர்ணயித்த 147 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு ரிஷப் பண்ட் தனி ஆளாக வெற்றிக்கு போராடினார். அவர் 57 பந்துகளில் 64 ரன்கள் அடித்திருந்தபோது அஜாஸ் படேல் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். முதலில் நடுவர் அவுட் வழங்கவில்லை. பின்னர் நியூசிலாந்து ரிவ்யூ அப்பீல் செய்தது.

ரீப்ளேவில் ரிஷப் பண்ட் பேட்டில் பந்து பட்டதற்கான துல்லியமான அறிகுறி ஏதுமில்லை. பந்து பேட்டை நெருங்கும்போது அல்ட்ரா எட்ஜில் சிறிய அதிர்வு காணப்பட்டதை வைத்து அவுட் என கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் பந்து பேட்டில் பட்டதா இல்லையா என்பதை கண்டறிய ஹாட் ஸ்பாட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. இதனால் பண்ட் அதிருப்தியுடன் வெளியேறினார். ஒருவேளை பண்டுக்கு அவுட் கொடுக்கப்படாவிட்டால் இந்திய அணி வெற்றி பெற அதிகம் வாய்ப்பு இருந்தது.

இந்நிலையில் இது குறித்து விமர்சனம் செய்துள்ள தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரான டி வில்லியர்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், "சர்ச்சை! மீண்டும் ஒரு கிரே பகுதி. ரிஷப் பண்ட் பேட்டில் பந்து பட்டதா இல்லையா? அந்தப் பந்து அவரது பேட்டை தாண்டும்போது ஸ்னிக்கோ மீட்டரில் கொஞ்சம் ஒரு அதிர்வு காணப்பட்டது. ஆனால் அந்த பந்து உறுதியாக பேட்டில் பட்டதா? என்று நமக்குத் தெரியவில்லை. இதுகுறித்துதான் நான் எப்பொழுதும் கவலைப்படுகிறேன். இது ஒரு பெரிய டெஸ்ட் போட்டியில் பெரிய தருணத்தில் நடக்கிறது. இப்படியான நேரத்தில் ஹாட்ஸ்பாட் தொழில்நுட்பம் எங்கே?" என்று பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்