பாபர் அசாம் அந்த எண்ணத்தை கைவிட வேண்டும் - பாக்.முன்னாள் வீரர் அறிவுரை

பாபர் அசாம் தற்சமயம் பேட்டிங்கில் சொதப்பலாக செயல்பட்டு வருகிறார்.

Update: 2024-09-17 04:59 GMT

image courtesy: AFP

லாகூர்,

சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

சமீப காலங்களாகவே தடுமாறி வரும் அந்த அணி கடந்த வருடம் பாபர் அசாம் தலைமையில் 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விகளுக்கு பொறுப்பேற்று தம்முடைய பதவியை ராஜினாமா செய்த பாபர் அசாம் மீண்டும் இந்த தொடரை முன்னிட்டு கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் இந்த தொடரிலும் அவருடைய தலைமையில் சுமாராக விளையாடிய பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது. அதனால் அவருடைய கேப்டன்ஷிப் மீது மீண்டும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஏனெனில் பாகிஸ்தான் பேட்டிங் துறையின் முதன்மை வீரராக போற்றப்படும் அவர் சமீப காலமாகவே கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் மோசமாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் பாபர் அசாம் கேப்டன் பொறுப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷித் லத்தீப் கூறியுள்ளார். அதனாலேயே. அவரது மனம் சரியான முறையில் செயல்படவில்லை என்றும், இதுவே தனிப்பட்ட முறையில் அவருடைய பேட்டிங் திறனை பாதிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "பாபர் அசாம் மனநிலை சரியாக செயல்படவில்லை. அவர் வலுக்கட்டாயமாக கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் என்பதை மறந்து விடக்கூடாது. மனம் சரியாக செயல்படாத பொழுது அது சமநிலையை பாதிக்கிறது. எனவே பேட்டிங்கில் அடித்து விளையாட முயற்சி செய்கிறோம். அதனால் அவர் கேப்டன் என்ற எண்ணத்தை கைவிட்டு விட்டு பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும். அவருக்கு தற்போது இருப்பது பேட்டிங் தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சினைகள் இல்லை. மனநிலை சார்ந்த பிரச்சினைகள் இருப்பதாகவே தோன்றுகிறது. அவர் மன அழுத்தத்தை சமாளிக்க கணிசமாக போராடுகிறார் என்று நினைக்கிறேன்" என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்