கே.எல். ராகுல் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர் அவ்வளவு எளிதில் கிடைக்க மாட்டார் - கம்பீர் ஆதரவு

கே.எல்.ராகுல் சமீப காலங்களாக தடுமாற்றத்துடன் பேட்டிங் செய்து வருகிறார்.

Update: 2024-11-11 20:19 GMT

image courtesy: PTI

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதன்படி இவ்விரு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 22-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது.

சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்ததால் கடும் விமர்சனங்களை சந்தித்த இந்திய அணி, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை குறைந்தது 4-0 என்ற கணக்கில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியில் தவிக்கிறது.

முன்னதாக இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வீரரான கே.எல். ராகுல் சமீப காலங்களாகவே சுமாராக விளையாடி இந்தியாவில் தோல்விகளுக்கு காரணமாக இருந்து வருகிறார். அதனால் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 அணியில் வாய்ப்பை இழந்த அவருக்கு டெஸ்ட் அணியில் மட்டும் அனுபவத்தை கருத்தில் கொண்டு வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வாய்ப்பிலும் சமீபத்திய வங்காளதேச மற்றும் நியூசிலாந்து தொடர்களில் அவர் சிறப்பாக செயல்படவில்லை. அதனால் அவரை அணியிலிருந்து மொத்தமாக நீக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் ராகுல் போன்ற வீரர் அவ்வளவு சுலபமாக கிடைக்க மாட்டார் என்று தலைமை பயிற்சியாளர் கம்பீர் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "அவரால் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ய முடியும். அவரால் 3வது இடத்தில் பேட்டிங் செய்ய முடியும். தேவைப்பட்டால் 6வது இடத்திலும் அவரால் விளையாட முடியும். இது போக ஒருநாள் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங் செய்கிறார். எனவே ராகுல் போல ஓப்பனிங், 4, 6வது இடத்தில் பேட்டிங் செய்வதுடன் கீப்பிங் செய்யும் திறமை கொண்ட வீரர்கள் உலகில் மற்ற அணிகளில் எவ்வளவு பேர் உள்ளார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள்" என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்