ஹமாசுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்; இஸ்ரேல் பிரதமர் நன்றி

பணய கைதிகளை பிடித்து சென்ற சூழலுக்கு பொறுப்பானவர்கள் கடுமையான விளைவை சந்திப்பார்கள் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;

Update:2024-12-04 00:53 IST

ஜெருசலேம்,

இஸ்ரேல் எல்லை வழியே, 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு புகுந்து கொடூர தாக்குதல் நடத்தியது. எதிரில் தென்பட்டவர்களையெல்லாம் கடுமையாக தாக்கி, வன்முறையில் ஈடுபட்டது. இதில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது. ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர்.

பணய கைதிகளை மீட்கும் முயற்சியும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், பணய கைதிகளை விடுவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ள சூழலில், டிரம்ப்பின் வலிமையான அறிக்கைக்காக நான் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். அவருடைய இந்த எச்சரிக்கை, அனைத்து பணய கைதிகளையும் விடுவிக்க செய்வதற்கான எங்களுடைய தொடர்ச்சியான முயற்சிக்கு வலு சேர்க்கும் வகையில் இருக்கும். ஜனாதிபதி டிரம்புக்கு நன்றி என தெரிவித்து உள்ளார்.

அமெரிக்க-இஸ்ரேலியரான ஈடன் அலெக்சாண்டர் என்பவர், அவரை விடுவிக்க கோரி கெஞ்சும் வீடியோ ஒன்றை ஹமாஸ் அமைப்பு சமீபத்தில் வெளியிட்டது. இது உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், டிரம்ப் இதற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

அடுத்த ஆண்டு 2025-ம் ஆண்டு ஜனவரி 20-ந்தேதி நான் ஜனாதிபதியாக பதவியேற்கும் பெருமைமிகு நாளுக்கு முன், பணய கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படவில்லை என்றால், மத்திய கிழக்கு நாடுகள் கடுமையான விலையை கொடுக்க வேண்டியிருக்கும்.

பணய கைதிகளை பிடித்து சென்ற சூழலுக்கு பொறுப்பானவர்கள் கடுமையான விளைவை சந்திப்பார்கள். பணய கைதிகளை உடனே விடுவியுங்கள் என தெரிவித்து உள்ளார். அவருடைய இந்த அறிக்கைக்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்