தனியார் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்பியது ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்
தனியார் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 'டிராகன்' விண்கலம் இன்று பூமிக்கு திரும்பியுள்ளது.;
வாஷிங்டன்,
'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனர் எலான் மஸ்க்கும், பிரபல தொழிலதிபர் ஜேரட் ஐசக்மேனும் இணைந்து பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் 'போலரிஸ் டான்' எனப்படும் தனியார் விண்வெளி பயண திட்டத்தை வடிவமைத்துள்ளனர்.
இந்த திட்டத்தின்படி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 'டிராகன்' விண்கலத்தில் ஜாரட் ஐசக்மேன் உள்ளிட்ட 4 பேர் புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்றனர்.
புறப்பட்ட 15 மணி நேரத்தில் சுமார் 1400 கி.மீ. உயரத்திற்குச் சென்று, 50 ஆண்டுகால விண்வெளி பயண வரலாற்றில் இதுவரை யாரும் செல்லாத உயரத்திற்குச் சென்று புதிய சாதனை படைத்தனர். தொடர்ந்து 700 கி.மீ. உயரத்தில் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட டிராகன் விண்கலத்தில் இருந்து, ஜாரட் ஐசக்மேன் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் பொறியாளர் சாரா கில்லி ஆகியோர் வெளியேறி வந்து 'ஸ்பேஸ் வாக்' எனப்படும் விண்வெளி நடையை மேற்கொண்டனர்.
அப்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பிரத்யேகமாக வடிவமைத்துள்ள கவச உடைகள் கதிர்வீச்சு அபாயத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறதா? என்பதை அவர்கள் பரிசோதனை செய்தனர். மொத்தம் 5 நாட்கள் பயணத்தின்போது 30 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தனியார் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 'டிராகன்' விண்கலம் இன்று பூமிக்கு திரும்பியுள்ளது. புளோரிடா கடற்கரை அருகே, அதிகாலை 3.37 மணிக்கு விண்கலம் பாராசூட் மூலம் கடலில் விழுந்தது. அதில் இருந்த 4 தனியார் விண்வெளி வீரர்களும் படகு மூலம் பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். இது தொடர்பான காட்சிகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.