டிரம்ப் உடனான விவாதத்தில் திணறல்... அதிபர் வேட்பாளர் ஜோ பைடனை மாற்ற முயற்சி?

டிரம்ப்பை எதிர்கொள்ள முடியாமல் ஜோ பைடன் திணறியது, அவரது கட்சி ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Update: 2024-06-28 15:05 GMT

Image Courtesy : AFP

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன்(வயது 81) களமிறங்கியுள்ளார். அதேபோல், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்(வயது 78) களமிறங்கியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்குமுன் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம். இந்த விவாத நிகழ்ச்சிகளின்போது வெளியுறவு கொள்கைகள், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு வேட்பாளர்களும் விவாதிப்பார்கள். அந்த வகையில் அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் ஜோ பைடன், டொனால்டு டிரம்ப் இடையேயான நேருக்கு நேர் விவாதம் இன்று நடைபெற்றது.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த விவாதத்தில் டிரம்ப், பைடன் என இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த விவாத நிகழ்ச்சி தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பானது. இந்த விவாதத்தில் வெற்றி பெற்றவர் யார்? என அமெரிக்க வாக்காளர்கள் 565 பேரிடம் மெசேஜ் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதில், 67 சதவிகிதம் பேர் விவாதத்தில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளனர். அதே சமயம், 33 சதவிகிதம் பேர் மட்டுமே விவாதத்தில் பைடன் வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே விவாதத்தின்போது டிரம்ப்பை எதிர்கொள்ள முடியாமல் ஜோ பைடன் திணறியது, அவரது கட்சி ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து ஜோ பைடனை விலக்கி வேறு வேட்பாளரை களத்தில் இறக்கலாமா என அவரது கட்சியின் மூத்த நிர்வாகிகள் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனின் வயது ஏற்கனவே பேசுபொருளான நிலையில், அவரது உடல் தளர்ச்சி மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்