இலங்கை அதிபர் தேர்தல்: பேஸ்புக்கில் விளம்பரம் செய்ய அரசியல் கட்சிகள் ரூ.11.57 கோடி செலவு

இலங்கை அதிபர் விக்ரமசிங்கே, டிக்டாக் வீடியோக்களுக்காக பெரிய அளவிலான தொகையை செலவு செய்திருக்கிறார் என்று தகவல் தெரிவிக்கின்றது.

Update: 2024-09-22 13:59 GMT

கொழும்பு,

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. மொத்தம் 75 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. இதில், தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் அனுரா குமார திசநாயகே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றால் இலங்கை நெருக்கடியை சந்தித்து வருகிறது. மக்களும் அவற்றை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த சூழலில், பொருளாதார வளர்ச்சியே இலங்கையில் தீர்வு ஏற்பட வழிவகுக்கும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது அனுரா குமார திசநாயகே கூறினார்.

அவருக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்து உள்ளது என வெளிப்படும் வகையில் தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகின்றன. தொடர்ந்து அவர் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளார். இந்நிலையில் இலங்கை அதிபர் தேர்தலில் விளம்பரத்திற்காக அரசியல் கட்சிகள் செலவிட்ட தொகை பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது.

நடந்து வரும் அதிபர் தேர்தலில், பேஸ்புக்கில் விளம்பரம் செய்வதற்காக அரசியல் கட்சிகள் இந்திய மதிப்பில் ரூ.11.57 கோடி செலவு செய்துள்ளது. இதனை மெட்டா ஆட் லைப்ரரி அமைப்பின் தரவுகளில் இருந்து மேற்கோள் காட்டி தி ஸ்ரீலங்கா கார்டியன் என்ற செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதேபோன்று, அதிபர் விக்ரமசிங்கே, டிக்டாக் வீடியோக்களுக்காக பெரிய அளவிலான தொகையை செலவு செய்திருக்கிறார் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்